நூலகத்தின் அமைப்பு
பொதுவாக நூலகம் என்றால் , நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், வாசகர்கள் வந்து படித்து மகிழ்வர்.
அப்படியான வடிவில் பல்லாயிரம் நூலகங்கள் நம்மை சுற்றி அமைந்துள்ளன , மகிழ்ச்சி.
பொதுவாக இப்படியான நூலகங்களின் வாயிலில் ஒரு நூலகர் அமர்ந்து இருப்பார், வாசகர்களுக்கு உதவுவார்.
நாம் கேட்கும் நூல்களை அடையாளம் காட்டி , நாம் தேடும் செய்தியை பெறுவதற்கு உதவுவார் நூலகர்.
காலங்காலமாக நாம் கண்டு , படித்து, மனதில் பதிந்த நூலக அமைப்பு இது.
இதனை தாண்டி ஒரு நூலகர் பெரிதாக என்ன செய்துவிட முடியும் ? , இந்த வடிவில் மட்டுமே நூலகத்தை இயக்க முடியும் என்று உறுதியாக ஏற்பவர்கள் , ஒரு மருத்துவ கல்லூரி ஆசிரியரால் நடத்தப்படும் இந்த மெய்நிகர் நூலகத்தின் செயல்படும் முறையை ஏற்பது சற்று கடினமே.....
இருப்பினும் , காலம் செல்ல செல்ல - நிலை மாறும் - எனக்கு என்மீது நம்பிக்கை உள்ளது, ஒரு காலம் வரும் - அன்று ஆயிரமாயிரம் மாணவர்கள், பொது மக்கள் இந்த மெய்நிகர் நூலகத்துக்கு வந்து பயன்பெறுவர்.
மாற்றத்தை - கொண்டுவருவது சுலபம் அல்ல.
மாற்றம் என்று எதை நான் குறிப்பிடுகிறேன் ?
நூலகம் என்பது ஒரு புனிதமான இடம், அது வாசகர்களின் சிந்தனையை தூண்டுவதாக அமையவேண்டும்.
மிகப்பெரிய மாற்றத்தை மனதில் ஏற்படுத்தும் சக்தி நூலகத்திற்கு உள்ளது.
நான் நூலக இயல் படிக்கவில்லை - இருப்பினும்,
ஒரு சிறப்புமிக்க நூலகமும், அதனை வழிநடத்தும் ஆழ்ந்த ஈடுபாடு உடைய நூலகரும் இணைந்தால் ஒரு சமூக எழுச்சியை உருவாக்கிட முடியும் - இது நான் ஏற்கும் சித்தாந்தம்.
ஒரு நூலகத்தால் ஒரு இன எழுச்சியை ஏற்படுத்த முடியுமா ?
என்ன சார் , பெரிய பெரிய வார்த்தையை எல்லாம் சொல்கிறீர்கள் ?
இன எழுச்சி என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?
ஆயிரமாயிரம் மக்கள் சிந்தனை மாற்றம் ஏற்பட்டு , உணர்வுடன் பொங்கிஎழும் நிலை அது , இன்றைய கால நிலையில் இதனை உருவாக்க எவ்வளவு பெரிய ஆள் பலம், அரசியல் பின்புலம் வேண்டும், பண பலம் வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா சார் ?
தனி மனிதராக அதுவும் இணையத்தின் மூலம் நீங்கள் நடத்தும் மெய்நிகர் நூலகம் மூலம் இதனை செய்வதாக கூறுவது எப்படி சாத்தியமாகும் ?
காமெடி பண்ணாதீங்க டாக்டர் ?
நான் முதன் முதலாக எனது நண்பர் ஒருவரிடம் எனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திய பொழுது என்னை பார்த்து இந்த தீர்ப்பை அவர் கூறினார்.
எதை சமூகம் முடியாது என்று தீர்க்கமாக நம்புகிறதோ, அதனை சாத்தியமாக்க வேண்டும்.
இந்த நூலகம் ஒரு புதிய கற்பித கொள்கையை நமது சமூகத்தில் உருவாக்கும் , நிறுவும்.
வாசகர்களை ஆசிரியர்களாக உருமாற்றும் நூலகம் இது.
தமிழ் இணைய உலகினில் கருத்து களவு என்னும் குற்றம் நிகழ்வதை முழுவதுமாக தடுக்கும் நூலகம் இது.
எனக்கு சில நண்பர்களை , நிறைய எதிரிகளை கொண்டுவந்து சேர்க்கப்போகும் நூலகம் இது.
தமிழ் மொழி வளர்ச்சியை , தமிழ் இன எழுச்சியை உருவாக்கப்போகும் நூலகம் இது
ஒரு தெளிவான செயல் திட்டத்தை மனதில் ஏற்று , இந்த மெய்நிகர் நூலகத்தை நான் வடிவமைத்துள்ளேன்.
நூலகத்தின் அமைப்பை மெல்ல மெல்ல வாசகர்களுக்கு இந்த இழையில் அறிவிப்பேன்.
No comments:
Post a Comment